எப்படி பேசுவது?
"ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்" (நீதி. 25:11).
"இளைப்படைந்தவனுக்குச் சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவை தந்தருளினார்" (ஏசாயா 50:4). கர்த்தராகிய இயேசுவுக்குக் 'கல்விமானின் நாவு' இருந்தது. ஆகவே 'அவருடைய வாயிலிருந்து கிருபையுள்ள வார்த்தைகள் புறப்பட்டன'. அவரைக் குறித்து ஜனங்கள், "அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை" என்றும், "இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்" என்றும் கூறியதாக நாம் வாசிக்கிறோம் (யோவான் 7:46,15). உண்மையில் மற்ற மனுஷர் கல்விகற்பது போல நம்முடைய கர்த்தர் ஒருபோதும் கற்கவில்லை. எனவேதான் அவர் ஒருபோதும் மற்ற மனுஷர் பேசியது போல பேசவில்லை!
அநேக தேவபிள்ளைகள் தாங்கள் என்ன பேச வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள்; ஆனால் வெகு சிலரே எப்படிப் பேச வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள் அன்பான வார்த்தைகளை அல்லது ஊக்குவிக்கும் வார்த்தைகள் கடினமான தோரணையில் பேசப்படுமாயின், அது அதைரியத்தையும் கசப்பையும் உண்டாக்கக் கூடும். கர்த்தராகிய இயேசு எப்படிப் பேச வேண்டுமென்பதை அறிந்திருந்தார்.
சமாரிய ஸ்திரி தன்னுடைய துர்நடத்தையை அல்லது பாவங்களை ஒத்துக்கொள்ளக்கூடிய மனநிலையில் இருக்கவில்லை; "எனக்குப் புருஷன் இல்லை" என்று கர்த்தராகிய இயேசுவிடம் ஒரு முழுப் பொய்யைக் கூறி, அவள் எல்லவற்றையும் மூடிமறைத்துவிடப் பிரயாசப்பட்டாள். கர்த்தர் அவளைக் குற்றப்படுத்துவதற்கு அல்லது ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, மிகவும் ஞானமாக, "ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய்" (யோவான் 4:17,18)என்று பதிலளித்தார். இப்படிக் கூறுவதற்குப் பதிலாக, அவர் அவளிடம், 'நீ கூறுவது ஒரு பொய். நான் ஒரு தீர்க்கதரிசி. உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் என்று எனக்குத் தெரியும்' என்று கூறியிருந்திருப்பாரென்றால், அவர் கூறியது நியாயமானது, சரியானது என்று மற்றவர்கள் அதைக் குறித்து சாட்சி கொடுத்திருந்தாலும், அந்த ஸ்திரீயின் ஜீவியம் மாற்றமடைந்திராது. "ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்" (நீதி. 25:11).
"சமத்திற்கேற்ற வார்த்தை சொல்ல", எப்படிப் பேசவேண்டுமென்று மட்டுமல்லாமல், எப்போது பேச வேண்டும் என்றும் நாம் அறிந்திருக்க வேண்டும். யூதாஸ்காரியோத்து சீஷர்களுடன் கூட இருந்தபோது, மகிமையான காரியங்களை அவர்களிடத்தில் பேசலாகாது என்பதில் கர்த்தராகிய இயேசு கவனமாக இருந்தார். "அவன் புறப்பட்டுபோனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார்" என்று கூறி (யோவான் 13:31). மறைக்கப்பட்ட மகிமையான வேறு பல சத்தியங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தினார். ஏற்ற சமயத்தில் நாம் பேசாமலிருந்ததினிமித்தம் எத்தனை பிரச்சனைகள் முளைத்தெழும்பியிருக்கின்றன! "ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!" (நீதி. 15:23).
'கவலையீனமான ஒரு வார்த்தை சண்டையைக் கிளப்பிவிடக் கூடும்; கொடூரமான ஒரு வார்த்தை ஒரு வாழ்க்கையையே பாழாக்கிவிடக் கூடும்; கசப்பான ஒரு வார்த்தை வெறுப்பை உட்புகுத்திவிடக் கூடும்; மிருகத்தனமான ஒரு வார்த்தை அடித்துக் கொல்லக் கூடும்;
கிருபையுள்ள ஒரு வார்த்தை பாதையை இலகுவாக்கக் கூடும்; சந்தோஷமான ஒரு வார்த்தை ஒரு நாளை வெளிச்சமாக்கக் கூடும்; ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட ஒரு வார்த்தை பாரத்தைக் குறைக்ககூடும்; அன்புள்ள ஒரு வார்த்தை சுகமும் ஆசீர்வாதமும் அளிக்கக் கூடும்.
No comments:
Post a Comment